சிவயவசி

சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசிசிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி
சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி சிவயவசி

ஞாயிறு, ஜூன் 21, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 7

அறத்திறங்க ளுக்குநீ யகண்டமெண் டிசைக்கும்நீ
திறத்திறங்க ளுக்குநீ தேடுவார்கள் சிந்தைநீ
உறக்கம்நீ யுணர்வுநீ யுட்கலந்த ஜோதிநீ
மறக்கொணாத நின்கழல் மறப்பினுங் குடிகொளே. 61

அண்டம்நீ யகண்டம்நீ யால்மூல மானநீ
கண்டம்நீ கருத்துநீ காவியங்க ளானநீ
புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே. 62

மையடர்ந்த கண்ணினால் மயங்கிடும் மயக்கிலே
ஐயிறந்து கொண்டுநீங்க ளல்லலற் றிருப்பீர்காள்
மெய்யடர்ந்த சிந்தையால் விளங்குஞான மெய்தினால்
உய்யடர்ந்து கொண்டுநீங்க ளூழிகாலம் வாழ்வீரே.  63

கருவிருந்த வாசலாற் கலங்குகின்ற வூமைகாள்
குருவிருந்து சொன்னவார்த்தை குறித்துநோக்க வல்லிரேல்
உருவிலங்கு மேனியாகி யும்பராகி நின்றுநீர்
திருவிலங்கு மேனியாகிச் சென்றுகூட லாகுமே.  64

தீர்த்தமாட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தமாட லெவ்விடந் தெரிந்துநீ ரியம்புவீர்
தீர்த்தமாட யெவ்விடந் தெரிந்துநீ ரறிந்தபின்
தீர்த்தமாக வுள்ளதுஞ் சிவாயவஞ் செழுத்துமே.  65

கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே
அழுத்தமான வித்திலே யனாதியா யிருப்பதோர்
எழுத்திலா வெழுத்திலே யிருக்கலா மிருந்துமே.  66

கண்டுநின்ற மாயையுங் கலந்துநின்ற பூதமும்
உண்டுறங்கு மாறுநீ ருணர்ந்திருக்க வல்லிரேல்
பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய்
அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே.  67

ஈன்றவாச லுக்கிரங்கி யெண்ணிறந்து போவீர்காள்
கான்றவாழை மொட்டலர்ந்த காரண மறிகிலீர்
நான்றவாச லைத்திறந்து நாடிநோக்க வல்லிரேல்
தோன்றுமாயை விட்டொழிந்துசோ திவந்து தோன்றுமே. 68

உழலும்வாச லுக்கிரங்கி யூசலாடு மூமைகாள்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைசேர வெண்ணுவீர்
உழலும்வாச லைத்திறந்து வுண்மைநீ ருணர்ந்தபின்
உழலும்வாச லுள்ளிருந்த வுண்மைதானு மாவீரே. 69

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி யும்முளே நாடியே யிருந்தபின்
பாலனாகி வாழலாம் பறந்துபோக யாக்கையும்
ஆலமுண்ட கண்டராணை யம்மையாணை யுண்மையே. 70



வியாழன், ஜூன் 18, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 6

சொற்குருக்க ளானதும் சோதிமேனி யானதும்
மெய்க்குருக்க ளானதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்க ளானதும் சாத்திரங்கள் சொல்வதும்
மெய்க்குருக்க ளானதுந் திரண்டுருண்ட தூமையே. 51

கைவடங்கள் கொண்டுநீர் கண்சிமிட்டி நிற்கிறீர்
எவ்விடங்கள் கண்டுநீ ரெண்ணியெண்ணி பார்க்கிறீர்
பொய்யுணர்ந்த சிந்தையை பொருந்திநோக்க வல்லிரேல்
மெய்கடிந்த தும்முளே விரைந்துகூற லாகுமே. 52

ஆடுகாட்டி வேங்கையை யகப்படுத்து மாறுபோல்
மாடுகாட்டி யென்னைநீ மதிமயக்க லாகுமோ
கோடுகாட்டி யானையைக் கொன்றுரித்த கொற்றவா
வீடுகாட்டி யென்னைநீ வெளிப்படுத்த வேணுமே. 53

இடதுகண்கள் சந்திரன் வலதுகண்கள் சூரியன்
இடக்கைசங்கு சக்கரம் வலக்கைசூல மான்மழு
எடுத்தபாதம் நீண்முடி யெண்டிசைக்கு மப்புறம்
உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே. 54

நாழியப்பும் நாழியுப்பும் நாழியான வாறுபோல்
ஆழியோனு மீசனு மமர்ந்துவாழ்ந் திருந்திடம்
ஏறிலேறு மீசனு மியங்குசக்ர தரனையும்
வேறுகூறு பேசுவோர் வீழ்வர்வீ ணரகிலே. 55

தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்மவன்
எல்லையான புவனமு மேகமுத்தி யானவன்
பல்லுநாவு முள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய்புகுந்து மாய்வரே. 56

எத்திசைக்கு மெய்வுயிர்க்கு மெங்களப்ப னெம்பிரான்
முத்தியான வித்துளே முளைத்தெழுந் தவச்சுடர்
சித்தமுந் தெளிந்துவேத கோயிலுந் திறந்தபின்
அத்தனாடல் கண்டபின் னடங்கலாடல் காணுமே. 57

உற்றநூல்க ளும்முளே யுணர்ந்துணர்ந்து பாடுவீர்
பற்றறுத்து நின்றநீர் பராபரங்க ளெய்துவீர்
கொற்றமாவை யுள்ளரைச் செருக்கறுத் திருந்திடில்
சுற்றமாக வும்முளே சோதியென்றும் வாழுமே. 58

போதடா வெழுந்ததும் புனலதாகி வந்ததும்
தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும்
ஓதடா வஞ்சுமூன்று மொன்றதான வக்கரம்
ஓதடா விராமராம ராமவென்னும் நாமமே. 59

அகாரமென்ற வக்கரத்தி லவ்வுவந் துதித்ததோ
உகாரமென்ற வக்கரத்தி லுவ்வுவந் துதித்ததோ
அகாரமும் உகாரமுஞ் சிகாரமின்றி நின்றதோ
விகாரமற்ற யோகிகாள் விரித்துரைக்க வேணுமே. 60



திங்கள், ஜூன் 15, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 5

வாயிலே குடித்தநீரை யெச்சிலென்று சொல்கிறீர்
வாயிலே குதப்புவேத மெனப்படக் கடவதோ
வாயிலெச்சில் போகவென்று நீர்தனைக் குடிப்பீர்காள்
வாயிலெச்சில் போனவண்ணம் வந்திருந்து சொல்லுமே. 41

ஓதுகின்ற வேதமெச்சி லுள்ளமந் திரங்களெச்சில்
மோதகங்க ளானதெச்சில் பூதலங்க ளேழுமெச்சில்
மாதிருந்த விந்துவெச்சில் மதியுமெச்சி லொளியுமெச்சில்
ஏதிலெச்சி லில்லதில்லை யில்லையில்லை யில்லையே. 42

பிறப்பதற்கு முன்னெலா யிருக்குமாறு தெங்ஙனே
பிறந்துமண் ணிறந்துபோ யிருக்குமாறு தெங்ஙனே
குறித்துநீர் சொலாவிடிற் குறிப்பில்லாத மாந்தரே
அறுப்பனே செவியிரண்டு மஞ்செழுத்து வாளினால். 43

அம்பலத்தை யம்புகொண்ட சங்கென்றால் சங்குமோ
கம்பமற்ற பாற்கடல் கலங்கென்றால் கலங்குமோ
இன்பமற்ற யோகியை யிருளும்வந் தணுகுமோ
செம்பொ னம்பலத்துளே தெளிந்ததே சிவாயமே. 44

சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே
சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றெது
முத்தியேது மூலமேது மூலமந் திரங்களேது
வித்திலாத வித்திலே யிதின்னதென் றியம்புமே. 45

சித்தமற்று சிந்தையற்று சீவனற்று நின்றிடம்
சத்தியற்று சம்புவற்று சாதிபேத மற்றுநன்
முத்தியற்று மூலமற்று மூலமந் திரங்களும்
வித்தைவித்தை யீன்றவிதத்தில் விளைந்ததே சிவாயமே. 46

சாதியாவதேதடா சலந்திரண்ட நீரெலாம்
பூதவாச லொன்றலோ பூதமைந்து மொன்றலோ
காதில்வாளி காரைகம்பி பாடகம்பொ னென்றலோ
சாதிபேத மோதுகின்ற தன்மையென்ன தன்மையே. 47

கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணெய் மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே. 48

தரையினிற் கிடந்தபோ தன்றுதூமை யென்றிலீர்
துறையறிந்து நீர்குளித்த தன்றுதூமை யென்றிலீர்
பறையறிந்து நீர்பிறந்த தன்றுதூமை யென்றிலீர்
புரையிலாத வீசரோடு பொருந்துமாற தெங்ஙனே. 49

தூமைதூமை யென்றுளே துவண்டலையு மேழைகாள்
தூமையான பெண்ணிருக்க தூமைபோன தெவ்விடம்
ஆமைபோல் முழுகிவந் தனேகவேத மோதுறீர்
தூமையுந் திரண்டுருண்டு சொற்ருருக்க ளானதே. 50



சனி, ஜூன் 13, 2015

பட்டினத்தார் பாடல்கள் - 4

நான்காவது
கச்சித் திருவகவல்
நிலைமண்டில ஆசிரியப்பா

திருமால் பயந்த திசைமுக னமைத்து
வருமேழ் பிறவியு மானிடத் துதித்து
மலைமகள் சோமான் மலரடி யிறைஞ்சிக்
குலவிய சிவபதங் குறுகா தவமே
மாதரை மகிழ்ந்து காதல்கொண் டாடும் 5

மானிடர்க் கெல்லாம் யானெடுத் துரைப்பேன்
விழிவெளி மாக்கள் தெளிவுறக் கேண்மின்
முள்ளும் கல்லும் முயன்று நடக்கும்
உள்ளங் காலைப் பஞ்சென வுரைத்தும்
வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் 10

துள்ளும் வராலெனச் சொல்லித் துதிக்கும்
தசையு மெலும்புந் தக்கபுன் குறங்கை
இசையுங் கதலித் தண்டென இயம்பியும்
நெடுமுடல் தாங்கி நின்றிடும் இடையைத்
துடிபிடி யென்று சொல்லித் துதித்தும் 15

மலமுஞ் சலமும் வழும்பும் திரையும்
அலையும் வயிற்றை ஆலிலை யென்றும்
சிலந்தி போலக் கிளைத்துமுன் னெழுந்து
திரண்டு விம்மிச் சீப்பாய்ந் தேறி
உகிராற் கீற வுலர்ந்துள் ளுருகி 20

நகுவார்க் கிடமாய் நான்று வற்றும்
முலையைப் பார்த்து முளரிமொட் டென்றும்
குலையுங் காமக் குருடர்க் குரைப்பேன்
நீட்டவும் முடக்கவும் நெடும்பொருள் வாங்கவும்
ஊட்டவும் பிசையவு முதவியிங் கியற்றும் 25

அலங்கையைப் பார்த்துக் காந்தளென் றுரைத்தும்
வேர்வையும் அழுக்கும் மேவிய கழுத்தைப்
பாரினி லினிய கமுகெனப் பகர்ந்தும்
வெப்பும் ஊத்தையும் மேவிய வாயைத்
துப்பு முருக்கின் தூய்மல ரென்றும் 30

அன்னமுங் கறியும் அசைவிட் டிறக்கும்
முன்னிய பல்லை முத்தென மொழிந்தும்
நீருஞ் சளியும் நின்றுதின் றொழுகும்
கூரிய மூக்கைக் குமிழெனக் கூறியும்
தண்ணீர் பீளை தவிரா தொழுகும் 35

கண்ணைப் பார்த்துக் கழுநீ ரென்றும்
உள்ளுங் குழம்பி யொழுகும் காதை
வள்ளைத் தண்டின் வளமென வாழ்த்தியும்
கையெமெண் ணெயுங் கலவா தொழியில்
வெய்ய அதரும் பேனும் விளையத் 40

தக்க தலையோட் டின்முளைத் தெழுந்த
சிக்கின் மயிரைத் திரண்முகி லென்றும்
பொற்பல பேசித் துதித்து நீங்கள்
நச்சிச் செல்லும் நரக வாயில்
தோலும் இறைச்சியுந்த துதைந்துசீப் பாயும் 45

காமப் பாழி கருவிளை கழனி
தூமைக் கடைவழி தொலைபெறு வாயில்
எண்சா ணுடம்பும் இழியும் பெருவழி
மண்பாற் காமம் கழிக்கு மறைவிடம்
நச்சிக் காமுக நாய்தா னென்றும் 50

இச்சித் திருக்கு மிடைகழி வாயில்
திங்கட் சடையோன் திருவரு ளில்லார்
தங்கித் திரியுஞ் சவலைப் பெருவழி
புண்ணிது வென்று புடவையை மூடி
உண்ணீர் பாயும் ஓசைச் செழும்புண் 55

மால்கொண் டறியா மாந்தர் புகும்வழி
நோய்கொண் டொழியா நுண்ணியர் போம்வழி
தருக்கிய காமுகர் சாரும் படுகுழி
செருக்கிய காமுகர் சேருஞ் சிறுகுழி
பெண்ணும் ஆணும் பிறக்கும் பெருவழி 60

மலஞ்சொரிந் திழியும் வாயிற் கருகே
சலஞ்சொரிந் திழியுஞ் தண்ணீர் வாயில்
இத்தை நீங்க ளினிதென வேண்டா
பச்சிலை யிடினும் பத்தர்க் கிரங்கி
மெச்சிச் சிவபத வீடருள் பவனை 65

முத்தி நாதனை மூவா முதல்வனை
அண்டர் அண்டமும் அனைத்துள புவனமும்
கண்ட அண்ணலைக் கச்சிற் கடவுளை
ஏக நாதனை இணையடி இறைஞ்சுமின்
போக மாதரைப் போற்றுத லொழிந்தே. 70

வெள்ளி, ஜூன் 12, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 4

நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு நித்தநித்த நீரிலே
விருப்பமொடு நீர்குளிக்கும் வேதவாக்கியங் கேளுமின்
நெருப்புநீரு மும்முளே நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்துகூட லாகுமே. 31

பாட்டிலாத பரமனை பரமலோக நாதனை
நாட்டிலாத நாதனை நாரிபங்கர் பாகனை
கூட்டிமெள்ள வாய்புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடா முனின்றதே. 32

செய்யதெங்கி லேயிளநீர் சேர்ந்தகார ணங்கள்போல்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்ப தில்லையே. 33

மாறுபட்டு மணிதுலக்கி வண்டினெச்சில் கொண்டுபோய்
ஊறுபட்ட கல்லின்மீதே யூற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரு மறிந்துநோக்கு மென்னையும்
கூறுபட்டு தீர்க்கவோ குருக்கள்பாதம் வைத்ததே. 34

கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே
ஆவது மழிவது மில்லையில்லை யில்லையே. 35

செங்கலுங் கருங்கலும் சிவந்தசாதி லிங்கமும்
செம்பிலும் தராவிலுஞ் சிவனிருப்ப னென்கிறீர்
உத்தம மறிந்துநீ ரும்மைநீ ரறிந்தபின்
அம்பலம் நிறைந்த ராடல்பாட லாகுமே. 36

பூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்
ஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ
ஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே. 37

இருக்கநாலு வேதமு மெழுத்தையற வோதிலும்
பெருக்கநீறு பூசினும் பிதற்றிலும் பிரானிரான்
உருக்கிநெஞ்சை யுட்கலந்து வுண்மைகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடலாகுமே. 38

கலத்தின்வார்த்து வைத்தநீர் கடுத்ததீ முடுக்கினால்
நிலத்திலே கரந்ததோ கடுத்ததீக் குடித்ததோ
கலத்திலே கரந்ததோ நீள்விசும்பு கொண்டதோ
மனத்தின்மாசை நீக்கியே மனத்துளே கரந்ததோ. 39

பறைச்சியாவ தேதடா பணத்தியாவ தேதடா
இறைச்சிதோ லெலும்பினு மிலக்கமிட் டிருக்குதோ
பறைச்சிபோகம் வேறதோ பணத்திபோகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்துபாரு மும்முளே. 40



பட்டினத்தார் பாடல்கள் - 3

மூன்றாவது

கோயில் திருவகவல்

இணைக்குறள் ஆசிரியப்பா

பாற்கடல் கடையப் படுங்கடு வெண்ணெயைத்
திருமிடற் றடக்கிய சிவனே அடைக்கலம்
அடங்கலும் அடக்கிடுங் கடுங்கொலைக் காலனைக்
காலெடுத் தடக்கிய கடவுணின் அடைக்கலம்
உலகடங் கலும்படைத் துடையவன் தலைபறித் 5

திடக்கையி லடக்கிய இறைவனின் அடைக்கலம்
செய்யபொன் னம்பலச் செல்வனின் அடைக்கலம்
ஐயநின் னடைக்கலம் அடியனின் அடைக்கலம்
மனவழி யலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்
விழுப்பொரு ளறியா அழுக்குறு மனனும் 10

ஆணவ மலத்துதித் தளைந்ததில் உளைந்திடும்
நிணவைப் புழுவென தெளிந்திடு சிந்தையும்
படிறும் பாவமும் பழிப்புறு நினைப்பும்
தவறும் அழுக்காறும் இவறுபொச் சாப்பும்
கவடும் பொய்யுஞ் சுவடும் பெருஞ்சின 15

இகலுங் கொலையும் இழிப்புறு புன்மையும்
பகையும் அச்சமும் துணிவும் பனிப்பும்
முக்குண மடமையு மைம்பொறி முயக்கமும்
இடும்பையும் பிணியும் இடுக்கிய ஆக்கையை
உயிரெனும் குருவிவிட் டோடுங் குரம்பையை 20

எலும்பொடு நரம்புகொண் டிடையிற் பிணித்துக்
கொழுந்தசை மேய்ந்து மெழுக்குவிழுங் குடிலைச்
செழும்பெழு வுதிரச் சிறுபுழுக் குரம்பையை
மலவுடற் குடத்தை புலவுடற் புட்டிலைத்
தொலைவிலாச் சோற்றுத் துன்பக் குழியைக் 25

கொலைப்படைக் கலம்பல கிடக்குங் கூட்டைச்
சலிப்புறு வினைப்பல சரக்குக் குப்பையைக்
கோட்சரக் கொழுகும் பீற்றற் கோணியைக்
கோபத்தீ மூட்டுங் கொல்லன் துருத்தியை
ஐம்புலப் பறவை யடையும்பஞ் சரத்தைப் 30

புலராக் கவலை வினைமரப் பொதும்பை
ஆசைக் கயிற்று லாடுபம் பரத்தைக்
காசிற் பணத்திற் சுழலுங்காற் றாடியை
மக்கள் வினையின் மயக்குந் திகிரியைக்
கடுவெளி யுருட்டிய சகடக் காலைப் 35

பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக்
கெடுவழிக் கரைசேர் கொடுமரக் கலத்தை
இருவினை விலங்கொடும் இயங்குபுற் கலனை
நடுவன்வந் தழைத்திட நடுங்கிடும் யாக்கையைப் 40

பிணமெனப் படுத்தியான் புறப்படும் பொழுதுநின்
அடிமலர்க் கமலத்துக் கபயநின் னடக்கலம்
வெளியிடை யுருமிடி யிடித்தென வெறித்தெழுங்
கடுநடை வெள்விடைக் கடவுணின் னடைக்கலம்
இமையா நாட்டத் திறையே அடைக்கலம் 45

அடியார்க் கெளியாய் அடைக்கல மடைக்கலம்
மறையவர் தில்லை மன்றுணின் றாடிக்
கருணைமொண் டலையெறி கடலே அடைக்கலம்
தேவரு முனிவருஞ் சென்றுநின் றேந்தப்
பாசிழைக் கொடியொடு பரிந்தருள் புரியும் 50

எம்பெரு மானின் னிணையடிக் கபயம்
அம்பலத் தரசே அடக்கல முனக்கே.

பட்டினத்தார் பாடல்கள் - 2

இரண்டாவது கோயில் திருவகவல்

நேரிசை ஆசிரியப்பா

காதள வோடிய கலகப் பாதகக்
கண்ணியர் மருங்கிற் புண்ணுட னாடுங்
காதலுங் கருத்துமல் லால்நின் னிருதாட்
பங்கயஞ் சூடப் பாக்கியஞ் செய்யாச்
சங்கடங் கூர்ந்த தமியேன் பாங்கிருந் 5

தங்கோ டிங்கோ டலமருங் கள்வர்
ஐவர் கலகமிட் டலைக்குங் கானகம்
சலமலப் பேழை இருவினைப் பெட்டகம்
வாதபித்தங் கோழை குடிபுகுஞ் சீறூர்
ஊத்தைப் புன்றோல் உதிரக் கட்டளை 10

நாற்றப் பாண்டம் நான்முழத் தொன்பது
பீற்றற் றுண்டம் பேய்ச்சுரைத் தோட்டம்
அடலைப் பெரிய சுடலைத் திடருள்
ஆசைக் கயிற்றில் ஆடும் பம்பரம்
ஓயா நோய்க்கிடம் ஓடு மரக்கலம் 15

மாயா விகார மரணப் பஞ்சரம்
சோற்றுத் துருத்தி தூற்றும் பந்தம்
காற்றிற் பறக்கும் கானப் பட்டம்
விதிவழித் தருமன் வெட்டுங் கட்டை
சதுர்முகப் பாணன் தைக்குஞ் சட்டை 20

ஈமக் கனலி லிடுசில விருந்து
காமக் கனலிற் கருகுஞ் சருகு
கிருமி கீண்டுங் கிழக்கஞ் சருமி
பவக்கொழுந் தேறுங் கவைக்கொழு கொம்பு
மணமாய் நடக்கும் வடிவின் முடிவிற் 25

பிணமாய்க் கிடக்கும் பிண்டம் பிணமேல்
ஊரிற் கிடக்க வொட்டா வுபாதி
காலெதிர் குவித்த பூளை காலைக்
கதிரெதிர் பட்ட கடும்பணிக் கூட்டம்
அந்தரத் தியங்கும் இந்திர சாபம் 30

அதிரு மேகத் துருவி னருநிழல்
நீரிற் குமிழி நீர்மே லெழுத்து
கண்டுயில் கனவிற் கண்டகண் காட்சி
அதனினும் பொல்லா மாயக் களங்கம்
அமையும் அமையும் பிரானே அமையும் 35

இமைய வல்லி வாழியென் றேத்த
ஆனந்தத் தாண்டவங் காட்டி
ஆண்டுகொண் டருள்கைநின் அருளினுக் கழகே.

பட்டினத்தார் பாடல்கள் - 1

திருப்பாடல் திரட்டு

முதலாவது கோவில் திருவகவல்

திருச்சிற்றம்பலம்

நிலைமண்டில ஆசிரியப்பா

நினைமின் மனனே நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை யுடலையோம் பற்க 5

பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும் மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும் மறந்தன வுணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும் 10

அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம் வெறுப்பன வுவப்பாம்
என்றிவை யனைத்தும் உணர்ந்தனை யன்றியும்
பிறந்தன பிறந்தன பிறவிக டோறும்
கொன்றனை யனைத்தும் அனைத்துநினைக் கொன்றன 15

தின்றனை யனைத்தும் அனைத்துநினைத் தின்றன
பெற்றனை யனைத்தும் அனைத்துநினைப் பெற்றன
ஓம்பினை யனைத்தும் அனைத்துநினை யோம்பின
செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை
சுவர்க்கத் திருத்தனை நரகிற் கிடந்தனை 20

இன்பமுந் துன்பமும் இருநிலத் தருந்தினை
ஒன்றொன் றொழியா துற்றனை அன்றியும்
புற்புதக் குரம்பை துச்சி லொதுக்கிடம்
என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
கல்லினும் வலிதாக் கருதினை இதனுள் 25

பிளையும் நீரும் புறப்படும் ஒருபொறி
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒருபொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி
உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒருபொறி
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி 30

சலமும் சீயுஞ் சரியும் ஒருவழி
உள்ளூறத் தொடங்கி வெளிப்பட நாறுஞ்
சட்டகம் முடிவிற் சுட்டெலும் பாகும்
உடலுறு வாழ்க்கையை உள்ளூறத் தேர்ந்து
கடிமலர்க் கொன்றைச் சடைமுடிக் கடவுளை 35

ஒழிவருஞ் சிவபெரும் போக வின்பத்தை
நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
எனதற நினைவற இருவினை மலமற
வரவொடு செலவற மருளற இருளற
இரவொடு பகலற இகபரம் அறவொரு 40

முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ் சோதியை
அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
நெருப்பினி லரக்கென நெக்குநெக் குறுகித்
திருச்சிற் றம்பலத் தொளிருஞ் சீவனை
நினைமின் மனனே நினைமின் மனனே 45

சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே நினைமின் மனனே.

திருச்சிற்றம்பலம்

வியாழன், ஜூன் 11, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 3

சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்
மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனை
சங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே. 21

தங்கமொன்று ரூபம்வேறு தன்மையான வாறுபோல்
செங்கண்மாலு மீசனுஞ் சிறந்திருந்த தெம்முளே
விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே
எங்குமாகி நின்றநாமம் நாமமிந்த நாமமே. 22

அஞ்செழுத்தி லேபிறந்து அஞ்செழுத்தி லேவளர்ந்து
அஞ்செலுத்தை யோதுகின்ற பஞ்சபூத பாவிகாள்
அஞ்செழுத்தி லோரெழுத் தறிந்துகூற வல்லிரேல்
அஞ்சலஞ்ச லென்றுநாத னம்பலத்தி லாடுமே. 23

அஞ்சுமஞ்சு மஞ்சுமே யனாதியான தஞ்சுமே
பிஞ்சுபிஞ்ச தல்லவோ பித்தர்காள் பிதற்றுவீர்
நெஞ்சிலஞ்சு கொண்டுநீர் நின்றுதொக்க வல்லிரேல்
அஞ்சுமில்லை யாருமில் லனாதியாகத் தோன்றுமே. 24

நீளவீடு கட்டுறீர் நெடுங்கதவு சாத்துவீர்
வாழவேணு மென்றல்லோ மகிழ்ந்திருந்த மாந்தரே
காலனோலை வந்தபோது கைகலந்து நின்றிடும்
ஆலமுண்ட கண்டர்பாத மம்மைபாத முண்மையே. 25

வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமாய்
மாடுமக்கள் பெண்டிர்சுற்ற மென்றிருக்கு மாந்தர்காள்
நாடுபெற்ற நடுவர்கையி லோலைவந் தழைத்திடில்
ஓடுபெற்ற தவ்விலை பெறாதுகாணு முடலமே. 26

ஓடமுள்ள போதெலா மோடியே யுலாவலாம்
ஓடமுள்ள போதெலா முறுதிபண்ணிக் கொள்ளலாம்
ஓடமு முடைந்தபோது வொப்பிலாத நாளிலே
ஆடுமில்லை கோலுமில்லை யாருமில்லை யானதே. 27

அண்ணலே யனாதியே யனாதிமுன் னனாதியே
பெண்ணுமாணு மொன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலங் கருவிலோங்கு நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்ஙனே. 28

பண்டுநான் பறித்தெறிந்த பன்மலர்க ளெத்தனை
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்க ளெத்தனை
மிண்டனாய்த் திரிந்தபோ திறைத்தநீர்க ளெத்தனை
மீளவுஞ் சிவாலயங்கள் சூழவந்த தெத்தனை. 29

அண்டர்கோ னிருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகாள்
பண்டறிந்த பான்மைதன்னை யாரறிய வல்லரே
விண்டவேதப் பொருளையன்றி வேறுகூற வகையிலா
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே. 30

புதன், ஜூன் 10, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 2

அந்திமாலை யுச்சிமூன்று மாடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களுந் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமுந் தினஞ்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமவென்னு நாமமே. 11

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துரந்த மந்திரம்
இதாமிதாம தல்லவென்று வைத்துழலு மேழைகள்
சதாவிடாம லோதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாமிதாமி ராமராம ராமவென்னும் நாமமே. 12

நானதேது நீயதேது நடுவினின்ற தேதடா
கோணதேது குருவதேது கூறிடுங் குலாமரே
ஆனதேது வழிவதேது வப்புறத்தி லப்புறம்
ஈனதேது ராமராம ராமவென்ற நாமமே. 13

சாத்திரங்க ளோதுகின்ற சட்டநாத பட்டரே
வேத்திரைப்பு வந்தபோது வேதம்வந் துதவுமோ
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்களேது சத்திமுத்தி சித்தியே. 14

தூரந்தூரந் தூரமென்று சொல்லுவார்கள் சோம்பர்கள்
பாரும்விண்ணு மெங்குமாய் பரந்தஅப் பராபரம்
ஊருநாடு காடுமோடி யுழன்றுதேடு மூமைகாள்
நேரதாக வும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 15

நாலுவேத மோதுவீர் ஞானபாத மறிகிலீர்
பாலுள்நெய்க லந்தவாறு பாவிகா ளறிகிலீர்
ஆலமுண்ட கண்டனா ரகத்துளே யிருக்கவே
காலனென்று சொல்லுவீர் கனவிலும்மஃ தில்லையே. 16

வித்திலாத சம்ப்ரதாய மேலுமில்லை கீழுமில்லை
தச்சிலாது மாளிகை சமைந்தவாறு தெங்ஙனே
பெற்றதாயை விற்றடிமை கொள்ளுகின்ற பேதைகாள்
சித்திலாத போதுசிவ னில்லையில்லை யில்லையே. 17

அஞ்சுமூணு மெட்டதா யநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நீருருச் செப்பிரேல்
பஞ்சமான பாதகங்க ணூறுகோடி செய்யினும்
பஞ்சுபோல் பறக்குமென்று நான்மறைகள் பன்னுமே. 18

அண்டவாச லாயிரம் ப்ரசண்டவாச லாயிரம்
ஆறிரண்டு நூறுகோடி யானவாச லாயிரம்
இந்தவாச லேழைவாச லேகபோக மானவாசல்
எம்பிரா னிருக்கும்வாச லியாவர்காண வல்லரே. 19

சாமம்நாலு வேதமும் சகலசாத் திரங்களும்
சேமமாக வோதினும் சிவனைநீ ரறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே யுணர்ந்தபின்
ஊனமற்ற காயமா யிருப்பனெங்க ளீசனே. 20

திங்கள், ஜூன் 08, 2015

சிவவாக்கியர் பாடல்கள் - 1

அரியதோர் நமச்சிவாய மாதியந்த மானதும்
ஆறிரண்டு நூறுதேவ ரன்றுரைத்த மந்திரம்
சுரியதோ ரெழுத்தையுன்னி சொல்லுவேன் சிவவாக்கியம்
தோஷதோஷ பாவமாய்கை தூரதூர வோடவோ. 1

கரியதோர் முகத்தையொத்த கற்பகத்தைக் கைதொழக்
கலைகள் நூல்கள் ஞானமுங் கருத்தில்வந்து திக்கவே
பெரியபேர்கள் சிறியபேர்கள் கற்றுணர்ந்த பேரெலாம்
பேயனாகி யோதிடும் பிழைபொறுக்க வேண்டுமே. 2

ஆனவஞ் செழுத்துளே யண்டமு மகண்டமு
ஆனவஞ் செழுத்துளே யாதியான மூவரும்
ஆனவஞ் செழுத்துளே யகாரமு மகாரமும்
ஆனவஞ் செழுத்துளே யடங்கலாவ லுற்றதே. 3

ஓடியோடி யோடியோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களுங் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்காள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே. 4

உருத்தரித்த நாடியி லொடுங்குகின்ற வாயுவை
கருத்தினா லிருத்தியே கபாலமேற்ற வல்லிரே
விருத்தரும் பாலராவர் மேனியுஞ் சிவந்திடும்
அருட்டரித்த நாதர்பாத மம்மைபாக முண்மையே. 5

வடிவுகண்டு கொண்டபெண்ணை மற்றொரு வனத்தினால்
விடுவனோவவனை யின்னம் வெட்டவேணு மென்பனே
நடுவன்வந் தழைத்தபோது நாறுமிந்த நல்லுடல்
சுடலைமட்டுங் கொண்டுபோய்த் தோட்டிகைக் கொடுப்பரே 6

என்னிலே யிருந்ததொன்றை யானறிந்த தில்லையே
என்னிலே யிருந்ததொன்றை யானறிந்து கொண்டபின்
என்னிலே யிருந்ததொன்றை யாவர்காண வல்லிரோ
என்னிலே யிருந்துணர்ந்து யானணுர்ந்து கொண்டனே. 7

நினைப்பதொன்று கண்டிலே னீயலாது வேறிலை
நினைப்புமாய் மறப்புமாய் நின்றமாய்கை மாய்கையை
அனைத்துமா யகண்டமா யநாதிமுன் னநாதியாய்
எனக்குள் நீயுனக்குள் நானிருக்குமாற தெங்ஙனே.  8

மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்க ளேழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ யிசைந்தபண் ணெழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுளாடும் பாவைநீ
நண்ணுநீர்மை நின்றபாதம் நண்ணுமா றருளிடாய். 9

அரியுமல்ல வயனுமல்ல வப்புறத்தி லப்புறம்
கருமைசெம்மை வெண்மையை கடந்துநின்ற காரணம்
பெரியதல்ல சிறியதல்ல பற்றுமின்கள் பற்றுமின்கள்
துரியமுங் கடந்துநின்ற தூரதூர தூரமே. 10